உள்ளூர் செய்திகள்

64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று- கியூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம்

Update: 2023-03-30 10:56 GMT
  • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன.

இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை வினியோகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான ஐ.எஸ்.ஓ. 28000 என 2 வகையான தரச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கேஷ் பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூரில் 2 கடைகள், ஓட்டுப்பட்டறை, வசம்பள்ளம், வெலிங்டன், ஜெயந்தி நகர், கூர்க்கா கேம்ப், ஊட்டி மார்க்கெட் போஸ்-1, காந்தல்-2, பிங்கர் போஸ்ட் பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் என மொத்தம் 60 கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

முத்ததோரை, தாய்சோலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 28000:2022 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கியூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News