உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் குதிரை பந்தயத்தில் பங்கேற்க உள்ள குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சி.

ஊட்டியில் முன்கூட்டியே வருகிற 1-ந் தேதி தொடக்கம்: பந்தயத்தில் களமிறங்கும் குதிரைகளுக்கு தீவிர பயிற்சி

Update: 2023-03-30 10:51 GMT
  • இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது.
  • தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி:

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

அரசு சார்பில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் சார்பிலும் ஆண்டு தோறும் ஊட்டியில் குதிரை பந்தயம் மற்றும் நாய் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுகிறது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தொடங்கி ஒன்றரை மாதங்கள் இந்த குதிரை பந்தயம் நடத்தப்படும். இதற்காக, சென்னை, புனே, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய குதிரைகள் கொண்டு வரப்படும். இந்த குதிரை பந்தயம் ஜூன் மாதம் வரை நடத்தப்படும். ஆனால், மே இறுதி வாரத்திற்கு மேல் மழை தொடங்கி மூன்று மாதங்களுக்கு கொட்டி தீர்க்கிறது.

இதனால், ஜூன் மாதங்களில் குதிரை பந்தயம் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை முன்னதாகவே ஊட்டியில் குதிரை பந்தயத்தை தொடங்கி முன்னதாக முடிக்க சென்னை ரேஸ் கிளப் முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 1-ந்தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. குதிரை பந்தயம் தொடங்க உள்ளதால் சுற்றுலாபயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 1-ந் தேதி முதலே ஊட்டியில் அதிகளவில் சுற்றுலாபயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News