உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2022-11-02 12:44 IST   |   Update On 2022-11-02 12:44:00 IST
  • பணத்தை தர மறுத்த அசோக்குமார்-மைதிலி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
  • அசோக்குமார், மைதிலி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் முருகதாஸ் (எ) முருகன் (வயது52). இவர் சர்வேராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, சாமிநத்தத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் மூலம் விருதுநகர் பெத்தநாச்சி நகரை சேர்ந்த தம்பதி அசோக்குமார்-மைதிலி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

அப்போது அவர்கள் அரசு துறையில் தங்களுக்கு அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளது. அதன்மூலம் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துளோம் என கூறியுள்ளனர்.

இதனை நம்பிய முருகதாஸ் இந்த தகவலை தனக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்தார். அப்போது அரசு வேலைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முருகதாஸ் மூலம் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் அசோக்குமார், மைதிலி ஆகியோரது வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் வரை செலுத்தி உள்ளனர்.

பணத்தை பெற்று கொண்ட அவர்கள் போலி வேலை ஆணைகளை தயாரித்து 16 பேரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு சென்று விசாரித்த போது அந்த ஆணை போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிகொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டுள்ளனர். பணத்தை தர மறுத்த அசோக்குமார்-மைதிலி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு மாரிமுத்து, முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக முருகதாஸ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அசோக்குமார், மைதிலி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News