உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையத்தில் நாய்களை விஷம் வைத்து கொன்றதாக விவசாயி கைது

Published On 2023-07-06 04:17 GMT   |   Update On 2023-07-06 04:17 GMT
  • சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
  • பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகே கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன.

இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது.

விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி அருள் செல்வம் (வயது 47) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை நாய்கள் கடித்து கொன்று விடும் என்று சில நாட்களாக அருள் செல்வம் அச்சத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவர், இந்த நாய்களை மருந்து வைத்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் அந்த நாய்கள் இறந்து கிடந்துள்ளது என்ற விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் நான் நாய்களை கொல்லவில்லை என்று கூறியுள்ளார். எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து, உயிரிழந்த நாய்களை நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News