காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: கலெக்டர் தகவல்
- சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது.
- ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் (விரிவாக்கம்) கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து, அனைத்து ஊரக, பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் மற்றும் அதேப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோராகவும் உள்ள 3 பெண்கள் சமையல் பொறுப்பாளராக முதன்மை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் அவர்களது குழந்தைகள் 5-ம் வகுப்பை தாண்டியவுடன் சமையல் பொறுப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
எனவே மேற்படி சமையல் பொறுப்பாளர் தேர்வு செய்யப்படுவதில் தகுதியற்ற நபர்கள் என எவரேனும் கண்டறியப்பட்டாலோ, கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
மேலும் முதன்மை குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட சமையல் பொறுப்பாளர் அனைவருக்கும், ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதற் கட்டமாக 1.6.2023 அன்றும், 2-ம் கட்டமாக 15.6.2023 அன்றும் செயல் படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.