தமிழ்நாடு செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருச்சிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்

Published On 2022-07-09 10:58 IST   |   Update On 2022-07-09 13:02:00 IST
  • ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
  • ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஈரோடு:

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் ரெயில் 12 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரெயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைந்தது.

இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு கிளம்பும் ரெயில் 11.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்து அடைந்தது. இதேபோல் மாலை 4.35 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரெயில் 8.25 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்தடையும். இவ்வறாக நாள் ஒன்றுக்கு 2 முறை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதனால், ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோட்டிற்கு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது.

இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.

Tags:    

Similar News