தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி
- மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
- பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், பலகார கடைகள் உள்பட அனைத்து கடைகளிலுமே மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மக்கள் தங்களுக்கு தேவையான புதுத்துணிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகல் நேரங்களில் கடைவீதிக்கு செல்ல முடியாதவர்களின் வசதியை கருத்தில் கொண்டு நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறக்க கோவை மாநகர போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக கடை மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் அனுமதிக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.