உள்ளூர் செய்திகள்

கடைகள், வணிக நிறுவனங்கள் நாளை வழக்கம்போல் இயங்கும்- மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-03-10 08:02 GMT   |   Update On 2023-03-10 08:02 GMT
  • கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.

மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.ம.க.வினர் கடைகளை மூடச் சொல்லி உரிமையாளர்களிடம் கூறினர். இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுமா? பஸ்கள் ஓடுமா? என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்தது.

இதுகுறித்து டெல்லியில் முகாமிட்டுள்ள கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் பஸ்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கும். கடைகளும் திறக்கப்படும். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இது மட்டுமின்றி என்.எல்.சி. நிர்வாகத்திடம் கூடுதல் இழப்பீடு பெற்று ஒப்புக்கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அனைவரின் நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. ஆகையால் உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News