உள்ளூர் செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருப்பூர் வாலிபரிடம் போலீசார் அதிரடி விசாரணை

Published On 2022-10-30 10:21 GMT   |   Update On 2022-10-30 10:21 GMT
  • கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
  • அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

திருப்பூர்:

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தல்கா, அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 32) என்பவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர்.

தற்போது கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் இன்று காலை வீட்டில் இருந்த அப்துல்ரசாக்கை விசாரணைக்காக அழைத்து சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அப்துல் ரசாக்கிற்கு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் வாலிபரிடம் விசாரணை நடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News