சென்னை விமானநிலையத்தில் பயணி விட்டு சென்ற தேங்காயால் பரபரப்பு
- சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
- உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் மத்திய தொழிற்படை போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேங்காயை கைப்பற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
பயணி தவறுதலாக தேங்காயை தவற விட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி அடைந்தனர். பின்னர் வழக்கம்போல் உள்நாட்டு முனையம் சுறுசுறுப்பாக இயங்கியது. கேட்பாரற்று கிடந்த தேங்காயால் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.