கோப்பு படம்
சதுரகிரியில் மீண்டும் கனமழை மலைப்பாதைகளில் தவித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு
- வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.
- சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடந்தது. இதையொட்டி கடந்த 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தந்தனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ததால் பக்தர்கள் அடிவாரம் இறங்கும்போது கடும் சிரமம் அடைந்தனர். கடந்த 28-ந் தேதி இரவு நேரத்தில் பெய்த மழையால் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பாதைகளில் சிக்கினர். காட்டாற்று ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தீயணைப்பு வீரர்கள் வனத் துறையினரால் பக்தர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர் காலை 7 மணிக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் வருகை கணிசமான அளவில் இருந்தது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் நேற்று மாலையில் மலை அடிவாரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது. இதன் காரணமாக மாங்கனி ஓடை, சங்கிலி பாறை பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுஇரவில் தவித்தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களும் மழை நின்றபின் டார்ச்லைட் வெளிச்சத்தில் பக்தர்களை பத்திரமாக மீட்டு அடிவாரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடி அமாவாசை முன்னிட்டு 25-ந் தேதி முதல் நேற்று நேற்று வரை 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சதுரகிரி மலை பாதை மூடப்பட்டது.