உள்ளூர் செய்திகள்

தனியார் கார் உதிரிபாக விற்பனை கடையில் தீ விபத்து- ரூ.3 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

Published On 2022-10-25 09:15 IST   |   Update On 2022-10-25 09:15:00 IST
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடையில் பணியில் இருந்த இளையராஜா நேற்று அதிகாலை கடையை பூட்டிவிட்டு சென்றார்.
  • தீ விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் வீல் அலைன்மென்ட் மற்றும் கார் உதிரி பாகங்கள், டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடையில் பணியில் இருந்த அவர் நேற்று அதிகாலை கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் அந்த கடையில் இருந்து அதிக அளவில் கரும்புகை வந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக கடையின் உரிமையாளரான இளையராஜாவுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதைடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார் உதிரி பாகங்கள், டயர்கள், கார் அலைன்மென்ட் செய்ய பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News