உள்ளூர் செய்திகள்

பரமக்குடி அருகே கார்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி

Published On 2022-11-21 09:52 IST   |   Update On 2022-11-21 09:53:00 IST
  • கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பரமக்குடி:

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது80). இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் நடந்த உறவினர் வளைகாப்பு நிழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கி சேதமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமேகலை, நிர்மலா, கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி ஊருக்குள் செல்வதற்காக எதிர் திசையில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பகைவென்றி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கேசவன் (53) என்பவர் குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. கேசவன் மீது ஏற்கனவே இரு விபத்து வழக்கு உள்ளது. போக்குவரத்து விதியை மீறி சென்றதால் இந்த ஏற்பட்டுள்ளதால் கேசவனை போலீசார் கைது செய்தனர்.

கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News