உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் கறிக்கோழி விலை 3 வாரத்தில் ரூ.54 சரிவு

Published On 2022-07-23 05:24 GMT   |   Update On 2022-07-23 05:24 GMT
  • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • கொள்முதல் விலை என்பது பண்டிகை நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.

சேலம்:

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உட்பட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது பண்டிகை நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.

கடந்த 1-ந் தேதி கறிக்கோழி கொள்முதல் விலை 120 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக குறைந்து இரண்டு வாரத்தில் 30 ரூபாய் சரிந்தது.

இதை அடுத்து 18-ந்தேதி 92 ரூபாயாக உயர்ந்தது. படிப்படியாக சரிந்து வந்த நிலையில் நேற்று மேலும் 4 ரூபாய் குறைந்து 66 ரூபாய் என கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் 3 வாரங்களில் 54 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலிசுப்ரமணியம் கூறியதாவது:-

வட மாநிலங்களில் ஸராவண் விரதம் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக வட மாநிலங்களுக்கு லோடு செல்வது தடைபட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஆடி 18 வரை நுகர்வு இருக்காது. கேரள மாநிலத்திற்கும் லோடு செல்லவில்லை. 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழியை மூன்று நாள்கள் கழித்து வியாபாரிகள் பிடிக்கின்றனர்.

அதனால் பண்ணைகளில் கறிக்கோழி தேக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு கறிக்கோழி கொள்முதல் விலையை குறைக்கும் விலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆவணி மாதம் பிறந்தால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News