உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். கார்டில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து முன்னாள் ராணுவவீரரிடம் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது

Published On 2022-08-02 06:37 GMT   |   Update On 2022-08-02 06:37 GMT
  • மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜகோபால்.
  • முன்னாள் ராணுவவீரர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த மர்ம பெண் யார் என்பது தெரியவந்தது

மதுரை:

மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 59). முன்னாள் ராணுவவீரர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.எஸ்.காலனியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கு இருந்த ஒரு பெண், அவருக்கு பணம் எடுத்த தர உதவி செய்வது போல் நடித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.76 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்துவிட்டார். இதுபற்றி அறிந்த ராஜகோபால், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆகியோரின் ஆலோசனைப்படி, எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.-இல் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது, அதில் முன்னாள் ராணுவவீரர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த மர்ம பெண் யார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.

பிடிபட்ட அந்த பெண் தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியை, மன்னர் நாயக்கர் தெருவை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரின் மனைவி மணிமேகலை (28) என்பதும் தெரியவந்தது. அவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு ஜெயிலில் இருந்து கடந்த 4 நாட்கள் முன்பு தான் ஜாமீனில் வெளியில் வந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவவீரரிடம் பணமோசடி செய்த மணிமேகலையை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் மணிமேகலை பல பேரிடம் பண மோசடி செய்து ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Similar News