உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Published On 2024-11-05 13:38 IST   |   Update On 2024-11-05 13:38:00 IST
  • பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.
  • பலர் குடைகளை பிடித்தப்படி போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கியது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் 1-ந் தேதி கலெக்டர் பணியிட மாறுதல் வழங்கினார். அந்த ஆணை அடுத்த ஒருவாரத்தில் ரத்து செய்யப்பட்டது.

மேலும் அவர்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.

கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இதில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

மேலும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அவர்களுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருப்பூரில் வெயிலும், மழையுமாக இருந்தது. எனவே பலர் குடைகளை பிடித்தப்படி போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News