உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கடலூர் வந்து காதலனை கரம் பிடித்த பெண்

Published On 2022-09-15 11:06 GMT   |   Update On 2022-09-15 11:06 GMT
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார்.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 21). இவருக்கும், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே சுஜிதாவின், பெற்றோர் அவரது காதலை ஏற்காமல் வேறு இடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி சுஜிதா, தனது காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார்.

அதன்படி ஆந்திராவில் இருந்து ரெயில் ஏறி கடலூர் வந்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசார், வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரித்ததில் வெங்கடேஷ், சுஜிதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். ஆனால் சுஜிதா, அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து போலீசார், வெங்கடேசை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் தங்களது சொந்த செலவில் சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுத்து, வெங்கடேசுக்கும், சுஜிதாவுக்கும் திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து வெங்கடேஷ் தனது காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மொழி தெரியாமல் கடலூருக்கு வந்த பெண்ணுக்கு தனது காதலனை போலீசார் திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி பெண்ணுக்கு தேவையான சீர்வரிசையும் போலீசார் வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகளிர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News