உள்ளூர் செய்திகள்

கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. தீவிரம்- கூடுதல் போலீசார் நியமனம்

Published On 2022-12-20 10:06 IST   |   Update On 2022-12-20 10:06:00 IST
  • கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
  • அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து தற்கொலை செய்த தினேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் தினேசின் குடும்பத்தினர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் சென்றனர்.

இதுபற்றி தினேசின் தந்தை போஜன் கூறுகையில் நானும், எனது குடும்பத்தினரும் பணிக்கு சென்றபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டு சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர்.

கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

மேலும் விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 பேர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம் மாநகர சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பழைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று தனிப்படையில் இணைந்தனர். இவர்கள் விரைவில் பணியை தொடர உள்ளனர்.

Tags:    

Similar News