உள்ளூர் செய்திகள்

சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 8 செம்மறி ஆடுகள் பலி

Published On 2023-03-14 10:52 IST   |   Update On 2023-03-14 10:52:00 IST
  • மர்ம விலங்கு தோட்டத்திற்குள் புகுந்தவுடன் அதனை கண்டு மாடுகள் அலறின.
  • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பேரோடு கிராமம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. தோட்டத்தில் 8 செம்மறி ஆடுகள், மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம விலங்கு சக்திவேல் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த 8 செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இதில் அந்த 8 செம்மறி ஆடுகளும் பரிதாபமாக இறந்தன.

மர்ம விலங்கு தோட்டத்திற்குள் புகுந்தவுடன் அதனை கண்டு மாடுகள் அலறின. மாடுகள் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது 8 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். இறந்த ஆடுகள் அனைத்தும் குடல்கள் வெளியே சரிந்த நிலையில் இருந்தன.

இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.

இது குறித்து வனத்துறையினருக்கும், சித்தோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்து சென்றனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் சிறுத்தை போன்ற உருவத்தில் ஒரு விலங்கு பதுங்கி பதுங்கி வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த விலங்கு சரியாக தெரியவில்லை.

இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News