திருத்தணியில் மதுக்கடையில் துளைபோட்டு கொள்ளையடித்த 4 வாலிபர்கள் கைது
- திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
- கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இருந்தனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
கடந்த 16-ந்தேதி நள்ளிரவு மர்மநபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு 250 மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன் கனகம்மா சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் டாஸ்மாக் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் வெள்ளவேடு போலீசார் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய மேல் திருத்தணியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (29), திருமழிசையைச் சேர்ந்த திருப்பதி(24), கிறிஸ்டோபர் என்கின்ற சதீஷ்(21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாமண்டூர் மதுக்கடையில் துளையிட்டு கொள்ளையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும் தங்களுக்கு கிருபாகரன்(22) என்பவர் அடைக்கலம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து திருத்தணி அடுத்த பூனிமாங்காடு பகுதியில் உறவினர் வீட்டில் இருந்த கிருபாகரனை போலீசார் கைது செய்தனர்.