உள்ளூர் செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி- 3 பேர் கைது

Published On 2022-08-12 11:21 IST   |   Update On 2022-08-12 11:21:00 IST
  • வேலுார் மாவட்டத்தில் 150 க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.
  • வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 101 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

வேலுார்:

வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயிரிடப்படும் நெல், நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து, பின்னர் அரிசியாக மாற்றப்பட்டு, ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் 150 க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

இதில் வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 101 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில் வேலுார் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் துணை மண்டல மேலாளர் மற்றும் 2 கண் காணிப்பாளர்கள், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாமல், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல, போலி பில் தயாரித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் கூடுதலாக ஒரு மூட்டைக்கு 5 ரூபாய் கமிஷனும் எடுத்துள்ளனர். இதுகுறித்து புகார்கள் வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி கவுதமன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் அதிகாரிகள் மோசடி செய்தது உண்மை எனத் தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த துணை மண்டல மேலாளர் விஜயகுமார் (வயது 51), கண்காணிப்பாளர்கள் வேலுாரைச் சேர்ந்த சுரேஷ் பாபு (49), தொரப்பாடியைச் சேர்ந்த கனிமொழி (41) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இங்கு மண்டல மேலாளராக இருந்த நாகராஜன், இதே புகாரின் பேரில், சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News