உள்ளூர் செய்திகள்

நீண்ட நாட்களாக செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

Published On 2023-06-10 10:00 GMT   |   Update On 2023-06-10 10:00 GMT
  • ஒகேனக்கல்லுக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
  • கேமராக்களை முறையாக பராமரிக்காததால் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் கடந்த காலங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. இதனை தடுக்க பென்னாகரம் காவல்துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதன்மையானது பென்னாகரம் நகர் பகுதியில், முக்கிய சாலை சந்திப்புகளிலும், கடைவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதற்காக பென்னாகரம் வர்த்தகர்கள் மற்றும் அரசு உதவியுடன் பென்னாகரத்தின் பிரதான பகுதிகளில், போலீசார் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி நிறைய குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, பெரும்பான்மையான கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில் பென்னாகரம் நகர் பகுதியில், தற்போது, சாலையோர கடைகள் முதல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. உள்ளூர் வாகனங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்ட மற்றும் அண்டை மாநில வாகனங்களும் ஒகேனக்கல் வந்து செல்வதால் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்களை கண்காணிக்கவும், தடுக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் அவசியமாகிறது.

இந்நிலையில் பென்னாகரம் பகுதியில் பெரும்பான்மையான கண்காணிப்பு கேமராக்கள் பெயரளவுக்கு மட்டுமே இருப்பதால் குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் முடியாமல் பென்னாகரம் போலீசார் மெத்தன போக்குடன் உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் கேள்வி எழுப்பினால் பென்னாகரம் போலீசார் அலட்சியத்துடன் பதில் அளிக்கின்றனர்.

தற்போது பென்னாகரத்திற்கு புதிய டிஎஸ்பியாக மகாலெட்சுமி பதவியேற்றுள்ளார். இவரது முன்னெடுப்பில் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? என்பது இப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News