சண்டி யாகம் தொடங்கியபோது எடுத்த படம்.
பிரத்யங்கிரா தேவி கோவிலில் சகஸ்ர சண்டி யாகம்
- மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சகஸ்ர சண்டி யாகம் நடந்தது.
- நாளை புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதிய ரேந்தல் விலக்கு பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் அன்னதானம் நடைபெறும். இங்கு ஆண்டு தோறும் பிரித்தியங்கிரா யாக பெருவிழா நடைபெறும்.
அதன்படி 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சகஸ்ர சண்டி யாகம் விழா கடந்த 16-ந்தேதி மாலை தொடங்கி யது. இந்த யாகம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடைபெறும் இந்த யாகத்தின் தொடக்கமாக கோயில் யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைத்து மகா கணபதி ஹோமம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா ஹோமம் நடத்தப்பட்டது. தஞ்சை குருஜீ கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேதவிற்பன்னர்கள் யாகத்தை நடத்தினர்.
யாகத்தின் 2-வது நாளாக வியாழக்கிழமை ருணமோஷன கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவபலி மண்டல பூஜை நடைபெற்றது.தொடர்ந்து 20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை பெறும் இந்த யாகத்தின்போது கோவில் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் விவசாயம் செழிக்கவும் அனைவரது குடும்பங்களிலும் சங்கடங்கள், துன்புங்கள் விலகி மகிழ்ச்சி, செல்வம், மங்களம். ஐஸ்வர்யம் உண்டாகவும் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதியினருக்காக நாளை (19-ந்தேதி) புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுகிறது.
யாகத்தின் கடைசி நாளான 20-ந்தேதி காலை சகஸ்ர சண்டி யாகம் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின் பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு கலசநீரால் பாதசமர்ப்பணம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகத்தை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து உள்ளனர்.
இவர்களுக்கு கோவிலில் தங்க இடம், 24 மணி நேரமும் அன்னதானத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மதுரை, மானா மதுரை ஆகிய இடங்களில் இருந்து பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
யாகத்துக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்யங்கிரா வேததர்ம ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் செய்துள்ளனர்.