மோட்டார் சைக்கிளை நிறுத்தியதில் தகராறில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாவு
- புஷ்பராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- கடந்த 17-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
சேலம்
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (73), பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 17-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த சிலம்பரசன் என்ற கோபால கிருஷ்ணன் (32)என்பவர் கட்டுமான பொருட்களை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக வந்தார்.
புஷ்பராஜ் வீட்டின் முன்பு வந்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த புஷ்பராஜ் எனது வண்டியை யாரிடம் கேட்டு அப்புறப்படுத்தினாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இப்போது ஆத்திரமடைந்த சிலம்பரசன் முதியவர் புஷ்பராஜை அடித்து தள்ளி விட்டார். இதில் கீழே விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.இதனை தடுக்க வந்த புஷ்பராஜின் மகள் கோகிலா வையும் அவர் அடித்தார். பின்னர் உறவினர்கள் புஷ்பராஜை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் சிலம்பரசன் மீது பெண் வன்கொடுமை கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் நேற்று உயிரிழந்தார்.இதை அடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இதனால் சிலம்பரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆணையும் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.