உள்ளூர் செய்திகள்

ராஜேஷ்குமார் பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்த காட்சி. 

ஏற்காட்டில் பாரா கிளைடிங் பயிற்சி அளிக்க ஒத்திகை

Published On 2022-12-17 07:06 GMT   |   Update On 2022-12-17 07:06 GMT
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து ஏற்காடு மலை அடிவாரம் வரை பாரா கிளைடிங் மூலம் பறக்க பயிற்சி தர ஏற்பாடு செய்து வருகிறார்.
  • சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிட நேரத்தில் ராஜேஷ் பறந்து இறங்கி உள்ளார்.

ஏற்காடு:

சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). பாரா கிளைடிங் பைலட் பயிற்சி முடித்துள்ள இவர், இளைஞர்களுக்கு பாரா கிளைடிங் செய்வது குறித்து பயிற்சியும் கொடுத்து வருகிறார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ராஜேஷ் பாரா கிளைடிங் பயிற்சி அளித்து வருகிறார்.

இதுபோல, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து ஏற்காடு மலை அடிவாரம் வரை பாரா கிளைடிங் மூலம் பறக்க பயிற்சி தர ஏற்பாடு செய்து வருகிறார். இதனையடுத்து கடந்த வருடம் ராஜேஷ் ஏற்காடு லேடி சீட் பகுதியில் இருந்து பாரா கிளைடிங் மூலம் குதித்து பயிற்சி எடுத்தார்.

இந்த நிலையில் நேற்று ராஜேஷ் ஏற்காடு வந்தார். பின்னர் லேடிஸ் சீட் பகுதியில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்த ராஜேஷ், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே இறங்கினார். சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிட நேரத்தில் ராஜேஷ் பறந்து இறங்கி உள்ளார்.

டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் பாரா கிளைடிங் பறக்க பயிற்சி தரப்படுகிறது. அதுபோல ஏற்காட்டிலும் பயிற்சி தர விரைவில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான முன்னோட்டமாக இங்கு பாரா கிளைடிங் செய்ததாகவும் ராஜேஷ் தெரிவித்தார். தொடர்ந்து மேலும் சில முறை பாரா கிளைடிங் செய்ய உள்ளதாகவும், மேகமூட்டம் மற்றும் குளிர் காலங்களில் இங்கு பறக்க இயலுமா? என பார்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News