உள்ளூர் செய்திகள்
- குளிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த சாத்தம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தன்(25). கூலி தொழிலாளி.
நேற்று மதியம் யோகானந்தன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதியினர் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து யோகானந்தன் உடலை மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யோகானந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.