ரெயில் பெட்டியின் நடுவில் பயணம் செய்யும் வாலிபர்கள்.
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 இணைப்பு பெட்டியின் நடுவே பயணம் செய்த வாலிபர்களால் பரபரப்பு
- செல்போனில் பேசிய படியும், பாடல்கள் கேட்ட வாறும் ஆபத்தை உணராமல் பயணம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரக்கோணம்:
சென்னை- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், பெண்கள் என அதிகமானோர் சென்று வருகின்றனர்.
இந்த ரெயில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடைக்கு வந்ததும் சில இளைஞர்கள் ரெயில் பெட்டிக்குள் செல்லாமல் 2 பெட்டிகளை இணைக்கும் கொக்கியில் உட்கார்ந்து கொண்டும் செல்போனில் பேசிய படியும், பாடல்கள் கேட்ட வாறும் ஆபத்தை உணராமல் பயணம் செய்தனர். இதனை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் செல்போன் மூலம் பிடித்து படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்று ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகமும், போலீசாரும் எடுக்க வேண்டும் என்றுபொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.