உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல்

Published On 2022-07-12 08:25 GMT   |   Update On 2022-07-12 08:25 GMT
  • அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
  • திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டர் அசாருதீனை தேடி வருகிறார்.

ஆர்.எஸ்.மங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை கிராமத்தில் அசாருதீன் என்பவர் பேபி என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வந்தார்.

அரசு அனுமதி பெறாமல் இந்த கடையை நடத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் அசாருதீன் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கும் வீடியோ ராமநாதபுரம் கலெக்டருக்கு கிடைத்தது.இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், திருவாடானை முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், உப்பூர் கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றனர்.

இதனை முன்கூட்டியே அறிந்த போலி டாக்டர் அசாருதீன் கடையை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் திருப்பாலைக்குடி போலீஸ் உதவியுடன் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது அரசு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்பனை செய்து வந்ததும், பொதுமக்களுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளித்ததும் கண்டறியப்பட்டது.

பின்னர் அந்த மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்,கடையின் உள்புறத்தை வீடியோ எடுத்து அங்கிருந்த ரூ.10 ஆயிரத்து 210-ஐ கைப்பற்றினர். மேலும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சியை திருப்பாலைக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டர் அசாருதீனை தேடி வருகிறார்.

Tags:    

Similar News