உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூர் பகுதியில் அரசு பணத்தை விரயம் செய்து வரும் பொதுப்பணித்துறை- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2022-08-28 14:27 IST   |   Update On 2022-08-28 14:27:00 IST
  • 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.
  • பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பத்மநாபபேரி குளத்தின் கரைகளில் ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஆவுடையானூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பத்மநாபபேரி குளக்கரையில் சாலை அமைக்க அனுமதி கோரி இருந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்பொழுது அதே பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குளக்கரையில் நடப்பட்டிருந்த ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் துளிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதற்கான செலவினங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கையால் விைரயம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சாலை அமைத்து வரும் குளக்கரையில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News