உள்ளூர் செய்திகள்

தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

எரியோட்டில் மீண்டும் பரபரப்பு 2 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த சைக்கோ வாலிபர் சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை

Published On 2022-11-01 13:09 IST   |   Update On 2022-11-01 13:09:00 IST
  • எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் தீ வைத்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.
  • நகரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் தீ வைத்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதுவரை 7 பேரின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் எரியோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் மாலைகோவில்தெருவை சேர்ந்த சேகர்(52), வெள்ளைப்பூண்டு வியாபாரியான துரைச்சாமிநாடார் தெருவை சேர்ந்த கோபால்(50) ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 9 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.

வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி அறிவுரையின்பேரில் எரிேயாடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி நகரின் முக்கிய இடங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்தினர்.

சைக்கோ வாலிபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்படி நேற்று இரவு முதல் நகரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரியோடு பகுதியில் தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News