உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி, கை-கால்களை இழந்த மாணவர்கள்

Published On 2025-02-06 11:10 IST   |   Update On 2025-02-06 12:39:00 IST
  • பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
  • சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.

திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.


இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.


இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.


டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News