உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்- கலெக்டர் அறிவுரை

Published On 2023-01-19 10:03 GMT   |   Update On 2023-01-19 10:03 GMT
  • கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது.
  • எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு விகித எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிமுகப் படுத்தப்ப ட்டுள்ளது.

இந்த திட்டம் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் செயல்பட உள்ளது. பெண் மீதான மற்றும் பெண் குழந்தை மீதான வெறுப்பை நீக்கிக் கொள்ள வேண்டும். ஆண்,பெண் பாலின சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது. வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News