உள்ளூர் செய்திகள்

செவிலியர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செவிலியர் தின உறுதிமொழி

Published On 2023-05-12 09:19 GMT   |   Update On 2023-05-12 09:19 GMT
  • எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
  • செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்:

கைவிளக்கு ஏந்திய காரிகை பிலாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி அவரது பிறந்த நாளான இன்று தஞ்சை அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1- புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சித்ரா வரவேற்றார். இதில் அனைத்து செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி , எனது வாழ்வில் மிகவும் தூய்மையாகவும் எனது பணியை உண்மையாக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு கேக் வெட்டி செவிலியர்களுக்கு கொடுத்து செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு பெறாமல் செவிலியர்களாகவே பணி ஓய்வு பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

99 சதவீத பெண்களை கொண்ட செவிலியர் துறையில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேல் இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செவிலியர் துறைக்கான தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.

செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்தி வரும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் , எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சாந்தகுமாரி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்டத் தலைவர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News