உள்ளூர் செய்திகள்

புதுவை சட்டசபை

புதுவை சட்டசபையிலும் வெடித்த என்.ஆர்.காங் - பா.ஜனதா விரிசல்

Published On 2022-08-25 15:22 IST   |   Update On 2022-08-25 15:22:00 IST
  • என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.
  • பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

பா.ஜனதாவுக்கு 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் பாஜகவின் அசோசியேட் எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பா.ஜனதா நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், மத்திய மந்திரி, மேலிட தலைவர்கள் வருகையின்போதும் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா தலைமை முதல்-அமைச்சர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமைந்து 15 மாதமாகியும் வாரிய பதவி நிரப்பப்படவில்லை. இதனால் ஏற்கனவே என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.

பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர். சமீபத்தில் புதுவைக்கு வந்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மேலிட பார்வையாளர் சுரானா, முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில் புதுவை சட்டசபையிலும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் வெடித்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை இல்லாமல் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை புறக்கணிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து பா.ஜனதா ஆதரவு தரும் ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.சீனிவாச அசோக்கும், என் தொகுதியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எம்.எல்.ஏ.வான எனக்கு தெரியாமல் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகின்றனர். பரிந்துரை இல்லாமல் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது என புகார் செய்தார்.

இதே குற்றச்சாட்டை பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் சிவசங்கர் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் தெரிவித்தார். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தங்கள் தொகுதியிலும் இதே நிலை நீடிப்பதாக கூறினார். அவர் பேசியதாவது:-

எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனையை கேட்டுத்தான் கோவில் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறை எதிர்கட்சி தொகுதிகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால் ஆளும்கட்சி தொகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கமிட்டி அமைக்கின்றனர். இதனால் ஆளும்கட்சியாக இருந்தாலும் எம்.எல்.ஏ.க்களான எங்கள் உரிமை பறிபோகிறது.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்பதற்காக எங்களை பழிவாங்குகிறீர்களா? நாங்களும் கையெழுத்திட்டுத்தான் முதல்-அமைச்சரை தேர்வு செய்துள்ளோம். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கடிதம் மூலம் ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. தொகுதிகளை முதல்-அமைச்சர் பழி வாங்குகிறாரா? இந்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்கட்சியாககூட நாங்கள் அமர்வோம் என்று கூறினார்.

Tags:    

Similar News