உள்ளூர் செய்திகள்

ரோட்டில் நடமாடும் மாடுகளை இனி திருப்பி தரமாட்டோம்- கால்நடை வளர்ப்பு இடங்களுக்கு கொண்டு செல்வதாக அறிவிப்பு

Published On 2023-09-09 10:31 GMT   |   Update On 2023-09-09 10:31 GMT
  • மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

சென்னை:

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயிர் காக்கும் தானியங்கி வெளிப்புற 'டிபிபிரி லேட்டர்' கருவியின் செயல்பாட்டை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அவசியமானது. மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும். மக்கள் கூடும் பொது இடங்களில் இக்கருவி அமைக்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பு பலகையும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். சுகாதாரத்தை மக்கள் தேடி செல்ல வேண்டும்.

வேதனையான சம்பவம் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி ஒருவர் குடல் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., நங்கநல்லூர், பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் இனிமேல் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்.

மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் பிடிக்கப்படுகிற மாடுகளை பேணி காக்க கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News