- கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார்.
- ரூ.2 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் ( வயது 54). இவர் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மரச்சாமான்கள் விற்பனை செய்யும் மரக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார். நேற்று மாலை குமார் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் மரக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
ரூ.2 லட்சம் மதிப்பு
இது குறித்து குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மரக்கடையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் ரூ.2 லட்சத்துக்கு மேல் மதிப்பிலான மரச்சாமான்கள் தீயில் எரிந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது.