உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் மாயமான 4 பள்ளி மாணவிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published On 2022-11-15 08:26 GMT   |   Update On 2022-11-15 08:26 GMT
  • கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.
  • சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2 மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என 4 பேரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் 4 பேரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நேற்று பள்ளிக்கே வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர்களும் தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவர்கள் கடத்தப்பட்டார்களோ என்ற அச்சத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

ஆனால் மாணவிகள் 4 பேரும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.

இதுகுறித்து மாணவிகளிடம் விசாரித்ததில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் எங்காவது வெளியே செல்லலாம் என முடிவெடுத்ததாகவும் அதன்படி 4 பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினர். அதன் பிறகு திண்டுக்கல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல்லுக்கு பஸ் இல்லாததால் அங்கிருந்த கரூர் பஸ்சில் ஏறியதாக கூறினர்.

பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும்போது சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்து கூறினர்.

இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுரைகள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் மாணவிகளின் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News