உள்ளூர் செய்திகள்

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து.

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை - உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை

Published On 2022-06-25 11:15 GMT   |   Update On 2022-06-25 11:15 GMT
  • 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது.
  • பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் :

மதுபானக்கடைகளை காப்பதில் இருக்கும் அக்கறை நெல் மூட்டைகளை காப்பதில் இல்லையே என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மதுராந்தகம், சிலாவட்டம் பகுதியில், 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு, விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது. சமீபத்தில், பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வரும் 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்துகொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News