உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

Published On 2023-04-28 07:18 GMT   |   Update On 2023-04-28 07:18 GMT
  • கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.
  • விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், மணியனூர், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், பெரியசோளி பாளையம், ஆனங்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஜவ்வரிசி ஆலைக்குச் செல்லும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.15 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,000 வரை குறைந்து, ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

இதேபோல், கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.

கடந்த வாரம் வரை, அதிக விலைக்கு மரவள்ளி கிழங்கு விற்கப்பட்டது. விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News