உள்ளூர் செய்திகள்

மதுரை ரெயில் தீ விபத்து: 9 பேரின் உடல்கள் விமானத்தில் லக்னோ அனுப்பி வைக்கப்படுகிறது

Published On 2023-08-27 07:47 GMT   |   Update On 2023-08-27 07:47 GMT
  • உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
  • 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

தாம்பரம்:

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர்.

இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

அவர்கள் பெயர் ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), தீபக் கஸ்யாப் (21), அன்குல் (36), சத்ரு தமன் சிங் (65), பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மித்திலேஸ் (62), சாந்திதேவி வர்மா (70), குமார் ஹிமானி பன் சால் (27), மனோரமா அகல்வால் (81), இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு 9 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து உடல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் 5 உடல்களும், மதியம் 2 மணிக்கு 4 உடல்கள் பெங்களூர் வழியாக செல்லும் மற்றொரு விமானத்தில் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

Tags:    

Similar News