உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க விரைவில் ஆய்வு பணி

Published On 2023-09-20 08:43 GMT   |   Update On 2023-09-20 08:43 GMT
  • திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
  • சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே திறந்தவெளியில் ரெயில்வே தண்டவாளம் இருந்தது. இதனை அந்தப்பகுதி மக்கள் கடந்து சென்று வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து ஹார்விபட்டிக்கு எளிதாக சென்று வர முடிந்தது. இந்த நிலையில் திறந்தவெளி ரெயில்வே தண்டவாள பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே தண்டவாள பகுதியை மூடியது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்தபடி ரெயில் நிலைய தண்டவாள பகுதி திறந்த வெளியாக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவும், மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் தற்போது பதில் அளித்துள்ளது. அதில் திருப்பரங்குன்றம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், அருகில் தென்கால் கண்மாய் இருப்பதால் சுரங்கப்பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுடன் இணைந்து விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News