உள்ளூர் செய்திகள்

மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி.

மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2023-04-06 09:18 GMT   |   Update On 2023-04-06 09:18 GMT
  • மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
  • அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

மதுரை

கேரள மாநிலம் ஆலப்புலாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 3-ந் தேதி சென்ற ரெயிலில் டி1 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை, பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசில் சிக்கி உள்ளார். அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கொடி அணிவகுப்பு நடத்துவது என்று ரெயில்வே போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி மதுரை ரெயில் நிலையத்தில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

மதுரை ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடை மற்றும் வளாகம் வழியாக அவர்கள் அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

மதுரை ரெயில் நிலையம் மட்டுமின்றி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு இன்று நடந்தது.

Tags:    

Similar News