உள்ளூர் செய்திகள்

ஆவணங்களை எடுத்துச்சென்ற பதிவாளர் மீது நடவடிக்கை

Published On 2023-03-14 08:01 GMT   |   Update On 2023-03-14 08:01 GMT
  • விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.

மதுரை

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது-

மதுரை மேலவெளி வீதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் உறுப்பினர்க ளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் மன்றத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மீட்புக்குழு என்ற பெயரில் பல பொய்யான குற்றச்சாட்டுகளை மன்ற நிர்வாகத்துக்கு எதிராக தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பலமுறை அளித்த பொய் புகார் காரணமாக எங்கள் தரப்பு நியாயங்களை கேளாமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் விக்டோரியா மன்றத்திற்கு தனி அலுவலர் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தெரிவித்த உத்தரவாதத்தை மீறி கடந்த 4-ந் தேதி மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மற்றும் மன்ற நிர்வாகத்திற்கு எதிராக செயல்படும் முத்துக்குமார் உள்ளிட்ட சில நபர்கள் மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக பணியாளர் செந்தில் குமாரை மிரட்டி அவரிடம் இருந்த சாவியை பறித்து அலுவலகத்தில் சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், சிசிடிவியின் ஹார்டிஸ்க், நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு நடவடிக்கை புத்தகம், வாடகைதாரர் ஒப்பந்த பத்திரங்கள், ரெசிப்ட் புத்தகம், ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரி களுக்கு புகார் தெரிவிக்கப் பட்டது. இதனிடையே நாம் தமிழர் கட்சி சேர்ந்த வெற்றி குமரன் உள்ளிட்ட சிலர் தனது அரசியல் பலத்தால் மன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இதனால் மன்ற நிர்வாகிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்றத்திற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீதும், மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News