உள்ளூர் செய்திகள்

 பாலாலயத்தையொட்டி முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பாலாலயம் விரைவில் கும்பாபிசேகம் நடத்த ஏற்பாடு

Published On 2022-08-22 08:49 GMT   |   Update On 2022-08-22 08:49 GMT
  • கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
  • இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்:

சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் "நில்' என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், "கரபுரநாதர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இந்த கோவில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோவிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.

குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோவிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்டஇந்த கோவிலில் திருப்பணி நடத்தி குமாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் காலை 9 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து,சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை இணை கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

திருப்பணியின்போது ராஜகோபுத்தில் உள்ள சிலைகளை மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். சன்னதி விமானம் மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். திருப்பணி 80 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News