ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தை செல்ல குமார் எம்.பி ஆய்வு
- ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
- ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது.
ஓசூர்,
ஓசூர்-தளி சாலையில் டிவிஎஸ் நகர் அருகேயுள்ள ெரயில்வே கேட் வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஓசூர் பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் இருந்து ஓசூர் வரை செல்லும் ரெயில்வே பாதை தற்போது ஒரு வழி பாதையாக உள்ளது. இதனை ரெயில்வே துறை இரு வழிப்பாதையாக மாற்றி வருகிறது.
இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் மேம்பாலம் கட்டப்படவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செல்லகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பெங்களூர் முதல் ஓசூர் வரை ரெயில்வே நிர்வாகம் இருவழிப்பாதையை அமைத்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த இடத்தில் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு மேம்பாலம் கட்டப்பட வேண்டும், ரெயில்வே நிர்வாகம் கூடிய விரைவில் இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் நிலையும் உள்ளது.
அதேநேரத்தில் ரெயில்வே கேட் அருகே செல்லும் ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது. எனவே எதிர் காலத்தில் ரெயில்வே பாதை, ரிங் ரோடு ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படாமல் ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து, உயர் தொழில் நுட்பங்களை கையாண்டு மேம்பாலத்தை அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.