உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு சந்தை நவீன மயமாகிறது- மறு சுழற்சி முறையில் கழிவுகள் அகற்றம்

Published On 2022-12-04 11:21 GMT   |   Update On 2022-12-04 11:21 GMT
  • மார்க்கெட் வளாகத்தில் தினசரி 200 டன் அளவுக்கு கழிவுகள் தேங்கி வருகிறது.
  • பூ மார்க்கெட்டில் தேங்கும் கழிவுகளை மறுமணம் வீசும் அகர்பத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிடவும் பரிசீலனை நடந்து வருகிறது.

போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் இயங்கி வருகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள், பூ வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், பொதுமக்கள் என சாதாரண நாட்களில் நாள்தோறும் 60ஆயிரம் பேர் வரையிலும் பண்டிகை, முகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் ஒரு லட்சம் பேர் வரையிலும் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

அதேபோல ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் இங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வரும் சில்லரை வியாபாரிகளின் வாகனங்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களும் நாள்தோறும் இந்த சந்தை வளாகத்திற்கு வந்து செல்கிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அங்காடி நிர்வாக குழு மூலம் அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த சந்தை வளாகத்தில் மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் கழிவறைகளை சீரமைப்பது, மின் விளக்கு, போக்குவரத்து நெரிசல், உள்ளிட்ட முக்கிய அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து மார்க்கெட் வளாகத்தை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்திய சி.எம்.டி.ஏ மற்றும் அங்காடி நிர்வாக குழு நிர்வாகம் சீரமைப்பு பணிகளை தொடங்கி துரிதப்படுத்தியுள்ளது.

அதன்படி அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிமம் பெற்ற கடை வியாபாரிகள் அனைவருக்கும் கடை எண் பொறிக்கப்பட்ட "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட உள்ளது.

காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அந்தந்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள "ஸ்மார்ட் கார்டு" மூலம் மட்டுமே இனி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைய முடியும். இதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள நுழைவு வாயில்கள் அனைத்தும் கணினி முறையில் நவீனமயமாக்கப்பட உள்ளது.

அவ்வாறு வரும் வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்கி செல்வதற்கு தனியாக இடமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் இனி மார்க்கெட் வளாகத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவது முற்றிலுமாக தடுக்கப்படும்.

அதேபோல் கடை இல்லாத வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இனி மார்க்கெட் வளாகத்தில் எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்ய முடியாது. இதனால் போக்குவரத்து நெரிசல் இனி ஏற்படாது.

முதல் கட்டமாக பழ மார்க்கெட் வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் எண் 18ல் கணினி முறையிலான நுழைவு வசதி சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து நுழைவு வாயில்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது.

மார்க்கெட் வளாகத்தில் நீண்ட காலமாக மிக பெரிய சவாலாக உள்ள போக்குவரத்து நெரிசலை சீரமைக்க ஏற்கனவே ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் என 3 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குழுவின் மேற்பார்வையில் மார்க்கெட் வளாகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சரி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள எல் மற்றும் எம் பிளாக்கில் ஏறத்தாழ 50ஆயிரம் சதுர அடியில் "ஆர்கானிக் ஸ்டோர்" எனப்படும் இயற்கை உணவு பொருட்கள் விற்பனைக்கு என தனியாக கடைகள் அமைய உள்ளது.

மார்க்கெட் வளாகத்தில் தினசரி 200 டன் அளவுக்கு கழிவுகள் தேங்கி வருகிறது. இதில் தற்போது தினசரி 25டன் காய்கறி கழிவுகளை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பயோ கியாஸ் எனப்படும் "உயிரி எரிவாயு" உற்பத்தி செய்வதற்கு காய்கறி மொத்த வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக எடுத்து சென்று பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேக்கமடைந்து வீணாகும் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றுவது, மின்சாரம் தயாரிப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்திடவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் பழ மார்க்கெட்டில் தினசரி தேங்கும் 70 டன் வாழைத்தார் போன்ற கழிவுகளை வீணாக்காமல் மறு சுழற்சி முறையில் அவற்றை எவ்வாறு எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஐ.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு வல்லுனர் குழுக்களின் கருத்துக்களை கேட்டு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் பூ மார்க்கெட்டில் தேங்கும் கழிவுகளை மறுமணம் வீசும் அகர்பத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிடவும் பரிசீலனை நடந்து வருகிறது.

இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை நவீன முறையில் சீரமைக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஒரு சில பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே மார்க்கெட் வளாகம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு கடை நடத்தும் வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மார்க்கெட் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி விற்பனை ஆகாமல் தேக்கமடையும் சுமார் 600 கிலோ காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து பெற்று அங்காடி நிர்வாக குழு மூலம் 40-க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சுழற்சி முறையில் வழங்கி உதவி செய்து வருகிறோம்.

ஆர்.ஓ இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீரில் இருந்து தேக்கமடையும் நீரை வீணாக்காமல் அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஒ.எஸ்.ஆர் எனப்படும் "திறந்தவெளிக்கான ஒதுக்கீட்டு நிலங்களில்" 2ம் கட்டமாக மரக்கன்றுகள் நடுவது மற்றும் தோட்டங்கள் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் தூய்மையான சந்தையாக கோயம்பேடு சந்தை மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News