40 லாரிகளில் விற்பனைக்கு குவிந்தது- கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது
- இன்று 40 லாரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மினி வேன்களில் சாமந்தி பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு குவிந்துள்ளது.
- இன்று அதிகாலை முதல் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு பூ விற்பனை நடக்கவில்லை.
போரூர்:
கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பூ தினசரி விற்பனைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் முகூர்த்த நாளை முன்னிட்டு மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. ஒரு கிலோ மல்லி ரூ.2 ஆயிரத்திற்கும், ஐஸ் மல்லி ரூ.1,500 வரையிலும் விற்கப்பட்டது.
இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அலங்காரத்திற்காக அதிக அளவில் பூக்கள் தேவைப்படும் என்பதால் கடந்த 2 நாட்களாகவே சாமந்தி மற்றும் ரோஸ் ஆகிய பூக்கள் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
இன்று 40 லாரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மினி வேன்களில் சாமந்தி பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு குவிந்துள்ளது. மேலும் முகூர்த்த நாளையொட்டி அதிகரித்த பூக்களின் விலையும் நேற்று முதல் மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
வியாபாரிகள் வரத்து அதிகரித்து நேற்று மாலை வரை பூ விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக அனைத்து பூக்களும் விற்று தீர்ந்து விட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு பூ விற்பனை நடக்கவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-
மல்லி-ரூ.1500, முல்லை-ரூ.900, கனகாம்பரம்-ரூ.700, ஜாதி-ரூ.600, சாமந்தி-ரூ.50 முதல் ரூ.80 வரை, ரோஸ்- ரூ.100, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி-ரூ.200.