4 மாதமாக குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பு
- கோப்புபாளையம் - திருக்காடுதுறையில் 4 மாதமாக குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பு
- சாலை விரிவாக்க பணியின்போது குழாய்கள் சேதம்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி, கோம்புப் பாளையம் ஊராட்சி, திருக்காடுதுறை ஊராட்சி குடிநீர் சப்ளைக்காக, தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நொய்யல், வேலாயும்பாளையம் செல்லும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழிகள் பறிக்கப்பட்டு விரிவாக்க பணி நடைபெற்றது. இதனால் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த, குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதேபோல் இளங்கோ நகர் வெள்ளதாரை, சொட்டையூர் பகுதிகளில் தார் சாலையின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி மந்தமாக நடைபெற்று, முடிவுராத நிலையில் உள்ளது. அதன் அருகே பெரிய அளவிலான குழிகள் இருக்கிறது. இதனை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றனர்.
அதேபோல் புங்கோடை முதல் நொய்யல் குறுக்கு சாலை வரை இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத மிகவும் மோசமான தார் சாலையாக உள்ளது. தார் சாலை அமைக்கும் பணிக்காக பல மாதங்களுக்கு முன் டெண்டர் எடுத்தும் இதுவரை தார் சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தொடங்கப்படவில்லை. ஆனால் இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே ஊராட்சிகள் நிர்வாகம் பொது மக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்கி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் மிகவும் மோசமான நிலையில் உள்ள தார் சாலையை சீரமைக்கும் பணி டெண்டர் விட்டும் இதுவரை தார்சாலை அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், அந்த சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.