உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி முக்கோண பூங்கா முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசாரை முற்றுகையிட்ட அய்யப்ப பக்தர்கள்

Published On 2022-11-17 14:07 IST   |   Update On 2022-11-17 14:07:00 IST
  • மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம்
  • போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

கன்னியாகுமரி,:

அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் மாலை அணிய வந்த அய்யப்ப பக்தர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்கா முன்பு நிறுத்தி வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு சென்றனர்.

இதற்கிடையில் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு தலைவரும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான சி.எஸ்.சுபாஷ் தலைமையில் பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் அய்யப்ப பக்தர்களும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News