உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் நிரம்பாத பச்சையாறு அணை.

களக்காட்டில் கண்ணாமூச்சி காட்டும் பருவமழை - பச்சையாறு அணை- குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம்

Published On 2022-11-21 09:19 GMT   |   Update On 2022-11-21 09:19 GMT
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பி ததும்புகின்றன.
  • நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை இதுவரை சரிவர பெய்யவில்லை என்றே விவசாயிகள் கூறுகின்றனர்.

களக்காடு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பி ததும்புகின்றன.

ஆனால் நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை இதுவரை சரிவர பெய்யவில்லை என்றே விவசாயிகள் கூறுகின்றனர். அவ்வவ்போது பெய்து வரும் மழையினால் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், நம்பியாறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. மழை தீவிரமடையாததால் ஆறுகளில் குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. இதையடுத்து குளங்கள் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இப்பகுதியில் திருக்குறுங்குடி பெரியகுளம், கோவிலம்மாள்புரம் குளம், சாலைப்புதூர் குளம், பத்மநேரி குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

இதேபோல் களக்காடு பச்சையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டவில்லை. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டமும் உயராமலேயே உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 13.25 அடியாகவே உள்ளது.

தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. பச்சையாறு அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் அணை நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாய பணிகளை தொடங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மலையடிவார பகுதியில் உள்ள ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அப்பகுதியில் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்தால் மட்டுமே அணைகளும், குளங்களும் நிரம்பும் என்பதால் களக்காடு பகுதி விவசாயிகள் கனமழையை எதிர்நோக்கி உள்ளனர்.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் இப்பகுதியில் சரிவர பெய்யாததால் விவசாயம் செழிக்காத நிலையில் வடகிழக்கு பருவமழையும் கண்ணாமூச்சி காட்டி வருவது விவசாயகளுக்கிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News